வெள்ளை பிள்ளையார் கோவிலில் பிர்மோத்சவ விழா: ஆகஸ்ட் 23ம் தேதி துவக்கம்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோயிலில் விநாயக சதுர்த்தி பிர்மோத்சவ விழா வருகிற 23ம்தேதி தொடங்குகிறது. சோழமண்டலத்தில் நால்வர்களால் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களுள் 25வது தலமாக திருவலஞ்சுழியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் வாணிகமலாம்பிகை சமேத சுவேத விக்னேஸ்வரசுவாமி, பெரியநாயகி சமேத சடைமுடிநாத சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. இத்தலம் பக்தர்களால் வெள்ளை பிள்ளையார் கோயில் என்றழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இத்தலத்தில் காவிரி நதியானது ஈசனை வலம் சுழித்து வழிபட்டு சென்றதால் திருவலஞ்சுழி என்னும் காரணப்பெயர் பெற்றது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் இணைகோயிலாக உள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் வருகிற 23ம்தேதி கணபதி ஹோமத்துடன் காலை பூர்வாங்க பூஜையுடன் விநாயக சதுர்த்தி பிர்மோத்சவ விழா தொடங்குகிறது. வருகிற 24ம்தேதி காலை 9மணிக்கு மேல் 9.45மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அடுத்தமாதம் 3ம்தேதி வரை வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை மாலை இருவேளைகளிலும் வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. வருகிற செப்.1ம்தேதி அதிகாலை விநாயகர் சதுர்த்தி தேவேந்திரன் பூஜை நடைபெறுகிறது. அதையடுத்து காலை7.30மணிக்கு மேல் 8.30மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்து திருவீதி வலம் வருதல் நடைபெறுகிறது. வருகிற செப்.2ம்தேதி காலையில் அரசலாற்றில் தீர்த்தவாரியும், மாலையில் கொடியிறக்கமும் நடைபெற உள்ளது. வருகிற செப்.3ம்தேதி காலை சுத்தாபிஷேகம், ஆஸ்தானபிரவேசம் நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வேதபாராயணமும், தேவார திருமுறை பாராயணமும் நடக்கிறது.