கூடஸ்த பிரம்மம் என்றால் என்ன?
கூடஸ்த பிரம்மம் பற்றிய கருத்து அத்வைதிகளுக்கு மட்டும் உடன்பாடானது இது அத்வைதிகள் மட்டுமே ஒப்புக்கொள்ளும் தத்துவமும் உண்மையும் ஆகும். எந்த மாறுதலையும் அடையாத சைதன்யம் கூடஸ்த பிரம்மம் எனப்படுகிறது. ஒருவன் கிளிஞ்சலைப் பார்த்து, அதை வெள்ளி என்று தவறாக நினைக்கிறான். மற்றொருவன் இரவு நேரத்தில் ஒரு கயிற்றைப் பார்த்து, அதைப் பாம்பு என்று தவறாக நினைக்கிறான். கிளிஞ்சல் வெள்ளியாகத் தோன்றுவது போலவும், கயிறு பாம்பாகத் தோன்றுவது போலவும் பிரம்மத்தில் இந்த உலகம் தோன்றுகிறது. பாம்பு என்று ஒருவன் நினைப்பதற்குக் கயிறு அதிஷ்டானமாக (ஆதாரமாக, அடிப்படையாக) இருப்பதுபோல், வெள்ளி என்று ஒருவன் நினைப்பதற்குக் கிளிஞ்சல் அதிஷ்டானமாக இருப்பதுபோல் - ஜகத்துக்கு அதிஷ்டானமாக இருக்கும் பிரம்மம் கூடஸ்த பிரம்மம் எனப்படுகிறது. தன்னுள் மாறுபாடில்லாமல், தன்னுடன் சம்பந்தப்பட்டவைகளின் மாறுதல்களுக்குக் காரணமாக உள்ள ஒரு பொருள் கூடம் என்று சொல்லப்படும். கூடம் என்ற தட்டான் பட்டறையின் மீது வைக்கப்படும் பொருள்கள்தான் மாறுபாடு அடையுமே தவிர, பட்டறை மாறுபாடு அடையாது, அதுபோல் இந்தப் பிரம்மம் இருப்பதால் கூடஸ்த பிரம்மம் எனப்படும்.
(சம்ஸ்கிருதத்தில், கூடவத் திஷ்டதி இதி கூடஸ்தம் என்று விபக்தி சொல்வார்கள் இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவது என்ற கருத்தில், சில இடங்களில் மாயையை கூடஸ்தம் என்று குறிப்பிடுவார்கள்.)