தர்மபுரி அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை
தர்மபுரி: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, தர்மபுரி வெளிப்பேட்டை தெரு, எஸ்.வி., ரோடு அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை விழா கடந்த, 4ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் நடந்தது. விழாவின் முக்கியநாளான நேற்று அதிகாலை, ஒரு மணிக்கு முகவெட்டு நிகழ்ச்சி நடந்தது. காலை, 10 மணிக்கு பூதா வாகனத்தில் அம்மன் பச்சியம்மன் கோவில் மயானத்திற்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் ஊர்வலத்தின் போது பக்தர்கள் காளி, அம்மன் வேடமிட்டும், அலகு குத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். 11 மணி முதல் மதியம், 1.30 வரை மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல், தர்மபுரி அன்னசாகரம் அங்காளம்மன்கோவிலில் நேற்று காலை, 10.30 மணிக்கு, அம்மன் பூத வாகனத்தில் மயானம் புறப்படுதல் நடந்தது. மாலை, 6 மணிக்கு வான வேடிக்கையுடன் திருவீதி உலா நடந்தது.