உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை: குவிந்த பக்தர்கள்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை: குவிந்த பக்தர்கள்

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அங்காளாம்மன், பூங்கா வனத்தம்மன் கோவில்களில் நடந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு அங்காளாம்மன் கோவில் தெரு, தாம்சன் பேட்டை பூங்காவனத்து அம்மன் கோவில்களில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மயான கொள்ளை திருவிழா கடந்த, 5ம் தேதி துவங்கியது, விழாவின் முக்கிய நாளான நேற்று, அதிகாலை, 5 மணிக்கு முகவெட்டு நிகழ்ச்சி, 6 மணிக்கு பக்தர்கள் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளான பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். மதியம், ஒரு மணிக்கு எருதுகள் பூட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில், அம்மன் மயானம் புறப்படுதல் நடந்தது. காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் முன், பக்தர்கள் ஆகாய காவடியில் பறந்து வந்து, அம்மனுக்கு பூஜை செய்தது, பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையில் மயான கொள்ளையும், துஷ்ட சக்திகளை ஓட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. மயான கொள்ளை விழாவை முன்னிட்டு, வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்ததுடன், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், திம்மாபுரம், மலையாண்டஹள்ளி, குண்டலப்பட்டி ஆகிய பகுதிகளில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, அங்காளம்மான் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !