உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் சுப்ரமணியர் தேர் திருப்பணி தீவிரம்

அவிநாசியில் சுப்ரமணியர் தேர் திருப்பணி தீவிரம்

அவிநாசி :அவிநாசியில், சுப்ரமணிய சுவாமி தேர் திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது; அடுத்த மாதம், வெள்ளோட்டம் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், விநாயகர், அவிநாசியப்பர், கருணாம்பிகை அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பெருமாளுக்கு என, ஆறு தேர்கள் உள்ளன. ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவில், தேர்கள் பவனி வரும். நடப்பாண்டு, சித்திரை தேர்த்திருவிழா, அடுத்த மாதம், 12ல் துவங்கி, 23ல் நிறைவடைகிறது.சுப்ரமணிய சுவாமி தேர் பழுதடைந்ததால், புதிதாக செய்ய, பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை முடிவு செய்தது. அதற்கான அனுமதி பெற்று, தற்போது, புதிய தேர் திருப்பணி பணிகள் நடைபெற்று வருகிறது. அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், "சுப்ரமணியர் தேர், 16 அடி உயரம், ஐந்து டன் எடையில் செய்யப்படுகிறது. இலுப்பை, வாகை மரங்களில் சட்டங்களும், தேரில் இடம்பெறும் சிற்பங்கள் தேக்கு மரத்திலும் செய்யப்படுகிறது. அடுத்த மாதம் நடக்கும் சித்திரை தேர்த்திருவிழாவில், புதிய தேர் பவனி வரும் என்றனர்.தேர் திருப்பணியில், சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த ஸ்தபதி பொன்ரவி தலைமையில், நான்கு சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !