பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பொள்ளாச்சி: ஜமீன்காளியாபுரம் - பெரும்பதிக்கு இடையே உள்ள, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக பெருவிழா நேற்று நடந்தது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், புரவிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள் ஜமீன்காளியாபுரம் - பெரும்பதி. இக்கிராமங்களுக்கு இடையில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வனபத்ர
காளியம்மன், கடந்த காலங்களில் ஓலைக்குடிசையில் குடிகொண்டிருந்த அம்மனுக்கு கோவில் கட்ட குறி கேட்கும் போதெல்லாம் ஏதேனும் ஒரு தடங்கல் தொடர்ந்து வந்தது.இச்சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன், பக்தரின் கனவில் வந்த வனபத்ரகாளியம்மன், குறிப்பிட்ட இடத்தில் கோவில் கட்ட அம்மன் உத்தரவு பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெரும் பொருட்செலவில் முன்மண்டபம், கற்பகிரகத்துடன் கற்கோவில் கட்டப்பட்டது. இச்சூழலில், சூலக்கல் அம்மனுக்கு இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்நிலையில் சகோதரி வனபத்ரகாளியம்மனுக்கு முன்கூட்டியே சிறப்பு செய்ய முடிவானது. இதனைத்தொடர்ந்து, வனபத்ரகாளியம்மனுக்கு, கும்பாபிஷேகம் நடத்த கோவில் திருப்பணிக்குழுவினர் முடிவு செய்தனர். நேற்று காலை, 10.00 - 10.30 மணிக்குள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள், கவுமார மடாலய குமரகுருபரசாமி அடிகள் முன்னிலையில், விநாயகர், முருகன், வனபத்ரகாளியம்மன், கருப்பராயன் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.விழாவில், பெரும்பதி, ஜமீன்காளியாபுரம், களத்துார், கானல்புதுார், சூலக்கல், புரவிபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். பக்தர்கள் அம்மனை நேர்கொண்டு கோபுர தரிசனம் மேற்கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.