கோவில் பாதுகாப்பு வரைவு கையேடு அறநிலைய துறை ஆலோசனை!
பழமை மாறாமல் கோவில்களை பாதுகாப்பதற்கான வரைவு கையேடு தயாரிப்பது குறித்து, அறநிலைய துறை அலுவலகத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் கட்டமைப்புகள் பாதுகாக்கப்படவில்லை என, ஆங்கில பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியை அடுத்து, உயர்நீதிமன்ற முதல் அமர்வு தானாகவே முன் வந்து ஒரு வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில், கோவில்களை பழைமை மாறாமல் பாதுகாக்க, தமிழக அரசு ஒரு வல்லுனர் குழுவை ஏற்படுத்தி, கோவில் திருப்பணி கையேட்டை உருவாக்க வேண்டும். அந்த கையேடு, அறிவியல் பூர்வமாகவும், யுனெஸ்கோ, சென்னை ஐ.ஐ.டி., மத்திய தொல்பொருள் துறை வல்லுனர்கள் வழிகாட்டுதல் படியும் தயாரிக்கப்பட வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கையேடு தயாரிக்கப்பட்டு, உயர்நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்கும் வரை கோவில் புனரமைப்புகள் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டது. இது சம்பந்தமான வழக்கு, வரும், 21ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலைய துறை ஆணையர் அலுவலகத்தில், வரைவு கையேடு தயாரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று, அறநிலைய துறை ஆணையர் தலைமையில் நடந்தது. அதில், கோவில் கட்டமைப்புகளை பாதுகாப்பது குறித்தும், திருப்பணிகள் செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.