திருமணஞ்சேரி ஸ்ரீ உத்வாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருமணஞ்சேரி கிராமத்தில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி கோயில் உள்ளது.
இத்தலத்தில் பரத் வாஜ் முனிவரின் மகளாக உமையம்மை அவதரித்து சிவபெருமானை பூலோக முறைப்படி திருமணம் செய்துகொண்ட தலமாகும். இத்தலத்தில் சுவாமி, அம்பாள் கைகோர்த்தபடி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதனால் திருமணமாகாத ஆண், பெண்கள் இக்கோயிலுக்கு வந்து சுவாமிக்கு மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திரு மணம் நடைபெறும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை முடிந்தது. தொர்ந்து பூர்ணாஹுதி மற்றும் மஹா தீபாரதணை செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடை பெற்றது.தொடர்ந்து கோபுரகலசங்களில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதனையடுத்து சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆ ராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம் மற்றும் பூஜைகளை உமாபதி சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்திவைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இரவு சுவாமி, அம்பாள் வீதியுலா காட்சி நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை செயல் அலுவலர் பத்ராச்சலம் செய்திருந்தார்.