செஞ்சிக்கோட்டை கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
செஞ்சி: செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. செஞ்சியில் ராஜகிரி கோட்டையின் மீது பல நுாறு ஆண்டுகள் பழமையான கமலக்கன்னியம்மன் கோவில் உள்ளது. இதனுடன் இணைந்த கோவில்களாக சர்க்கரை குளக்கரை காளியம்மனும், பீரங்கிமேட்டில் மாரியம்மன் கோவிலும் உள்ளன.
கமலக்கன்னியம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் எறுமை கிடா பலி கொடுத்து, தேர் திருவிழா
நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு தேர் திருவிழா மே 24ம் தேதி நடத்த உள்ளனர். இக்கோவிலுக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பில் 41 அடி உயரம் உள்ள புதிய தேர் வடிவமைத்துள்ளனர். இதற்கான வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு கலச பிரதிஷ்டையும், கணபதி ஹோமம உள்ளிட்ட விசேஷ ஹோமங்கள் நடந்தன. காலை 7:00 மணிக்கு ஹோமத்தில் வைக்கப்பட்ட கலசத்தை சிம்மாசனத்தில் ஏற்றினர். தேருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகமும், மகா தீபாராதனையும் செய்தனர். தொடர்ந்து 7.20 மணிக்கு தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்தல் நடந்தது. திருவள்ளுவர் தெரு, திருவண்ணாமலை ரோடு, விழுப்புரம் ரோடு, சத்திர தெரு வழியாக தேர் பவனி வந்தது. அறங்காவலர் அரங்க ஏழுமலை, உபயதாரர்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.