திட்டமிட்டபடி பூரம்: கேரள அரசு உறுதி!
திருச்சூர்: கேரள மாநிலம், திருச்சூரில் நடக்கும் பூரம் திருவிழாவுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, மாநில அரசு, அந்த கட்டுப்பாடுகளை திரும்ப பெற்றது. கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள, பரவூர் புற்றிங்கல் தேவி கோவில் திருவிழாவில், வாணவேடிக்கை நடத்தப்பட்டதில், பெரும் தீ விபத்து ஏற்பட்டு, 113 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கேரளா முழுவதும், கோவில்களில் இரவு நேரங்களில், அதிக சத்தத்துடன் கூடிய வெடிகளை வெடிக்க, அம்மாநில ஐகோர்ட் தடை விதித்தது. இந்நிலையில், திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரசித்தி பெற்ற பூரம் திருவிழா, ஏப்ரல், 17ல் நடக்கிறது. இதில், பெரிய அளவில் வாணவேடிக்கைகள் நடப்பதுடன், யானைகள் அணிவகுப்பும் நடக்கும். கொல்லம் வெடிவிபத்தை தொடர்ந்து, இந்த ஆண்டு, பூரம் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளாவின் பாரம்பரிய விழாவை சீர்குலைக்க கூடாது என வலியுறுத்தினர். இதனால், கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக, மாநில வனத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். இதற்கிடையே, திருச்சூர் பூரம் விழாவில், அனுமதிக்கப்பட்ட சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிக்க, ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த கேரள அமைச்சரவை கூட்டத்தில், வாணவேடிக்கைக்கு முழுமையாக தடைவிதிக்க முடியாது என முடிவு செய்யப்பட்டது.
திருச்சூர் பூரத்திற்கு தடை விதித்தால், கேரளாவின் கலாசார வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாகி விடும். அது, தன் பழம் பெருமையை இழந்து விடக்கூடாது. உயரதிகாரிகள் தலையிட்டு உரிய அனுமதி வழங்க வேண்டும். -ஆண்ட்ரூ, ஆர்ச் பிஷப், திருச்சூர்யானைகள் அணிவகுப்பிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்ப பெற்றதை கண்டிக்கிறோம். விலங்குகளின் நலனில் அக்கறையின்றி, தேவசம் போர்டுடன், மாநில அரசு சமரசம் செய்துள்ளது. -நீலகண்டன், விலங்குகள் நல ஆர்வலர்