காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டூர் ரோடு விண்ணளந்த காமாட்சியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி திருவிழாவையொட்டி, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இக்கோவிலில், ஏப்., 12ம் தேதி விக்னேஷ்வர பூஜை, கொடியேற்றத்துடன், சித்ரா பவுர்ணமி விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் கணபதி ேஹாமமும், தெய்வ குளம் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதலும் நடந்தன. நேற்று காலை, 9:00 முதல் 11:00 மணி வரை, ஏகாம்பரேஸ்வரருக்கும், விண்ணளந்த காமாட்சியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு மகா அபிேஷகம், முளைப்பாரி எடுத்தல், 24ம் தேதி வன தேவதை வழிபாடு நடக்கிறது. பொள்ளாச்சி, ஏரிப்பட்டியில் உள்ள காமாட்சியம்மன் கோவில், 21ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, ஏப்., 19ல் துவங்கியது. நேற்றுமுன்தினம், கணபதி ேஹாமம், சக்தி கும்பம் அழைத்தல் நடந்தன. நேற்று காலை, 8:00 மணிக்கு, பெருமாள் கோவிலில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. காலை, 10:00 முதல், 11:00 மணி வரை, மாவிளக்கு பொங்கல் பூஜையும், 11:15 முதல் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இரவு, 7:00 மணிக்கு மகா அபிேஷகத்துடன், விழா நிறைவடைகிறது.