செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அருகிலுள்ள, செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். கரூர் அடுத்த, புஞ்சை கடம்பங்குறிச்சி அருகே காவிரிக்கரையோரம் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோவில். சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம், பல்வேறு மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். தேரோட்டம் கடம்பங்குறிச்சியில் இருந்து பெரியவரப்பாளையம், சியாம்பாளையம், சின்னவரப்பாளையம், மேட்டுப்பாளையம் வழியாகச் சென்றது. பெரியவரப்பாளையம் காளியம்மன் கோவில் வழியாக மீண்டும் செல்லாண்டியம்மன் கோவில் வந்தடைந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். அதன்பிறகு நேற்று முன்தினம் காலை, கிடா வெட்டி அம்மனுக்கு பூஜை செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மஞ்சள் நீராட்டு விழாவும் கோலாகலமாக நடந்தது. இந்த தேரோட்ட விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.