பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்குள் பிரவேசித்த கள்ளழகர்!
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் கோயிலுக்குள் பிரவேசித்தார். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, தங்க நெல் மணி தோரணம் சூடி, ஈட்டி, வளரி, கத்தி, கேடயம், தடி, வாள் ஏந்தி அழகர் காட்சியளித்தார். அப்போது வெட்டிவேர், மல்லிகை, கனகாம்பர பந்தலிட்ட பூப்பல்லக்கில் காலை 8 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டார். முக்கிய வீதிகளில் உலா வந்த அழகரை மேள, தாளம்,வாணவேடிக்கை முழங்க பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். மாலை 6 மணிக்கு கோயில் வாசலை அடைந்து, கருப்பண்ணசாமியிடம் விடை பெற்றுச் சென்ற அழகர் கோவிலுக்குள் பிரவேசமானார். இரவு கண்ணாடி சேவை நடந்தது. இன்று பகல் உற்சவசாந்தி, நாளை காலை பாலாபிஷேகம், இரவு பெருமாள் பூப்பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.