வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்!
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. மாலையில் வீரபாண்டி கோயில் வீட்டில் இருந்து அம்மனின் திருவாபரண பெட்டி பவனியாக கோயில் வந்தடைந்தது. இரவு மண்டபகப்படி நடந்தது. முதல்நாளிலேயே நேர்த்திக்கடன் செலுத்த உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். முல்லை பெரியாற்றில் நீராடி, அக்னி வளர்த்து ஆடிப்பாடி அக்னி சட்டி ஏந்தி கோயிலுக்கு வந்தனர்.
நேர்த்திக்கடன்: பக்தர்கள் மஞ்சள் உடையணிந்து நேர்த்திக்கடனாக ஆயிரம் கண்பாணை, பால்குடம், காவடி எடுத்தல், முடி காணிக்கை, அங்கப்பிரதட்சணம், மாவிளக்கு செலுத்தி வருகின்றனர். முடிக்காணிக்கை செலுத்துவோருக்காக தனி இட வசதி செய்து பணியாளர்களை நியமித்துள்ளனர். கோயில் வளாகத்தில் நெருக்கடியை தவிர்க்க ’சிசிடிவி’ கேமரா, பாதுகாப்பிற்கு 200 போலீசார், தீயணைப்புதுறையினர், நோய் தடுப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்: வீரபாண்டி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் கோயிலில் நெருக்கடியின்றி காணப்பட்டது. நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமை யில் திருவிழா ஏற்பாடுகளை செய்துள்ளனர். அம்மன் நாளை புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருகிறார். 13ம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 17ம்தேதி ஊர்பொங்கல் நடைபெறுகிறது
கூடலுார்: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கூடலுாரில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக காளியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தேசிய நெடுஞ்சாலையில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கின. பின்னர் காளியம்மன் கோயிலில் இருந்து வாகனங்களில் வீரபாண்டிக்கு சென்றனர்.