பழநியில் வைகாசி விசாக விழா துவக்கம்: மே 20ல் திருக்கல்யாணம்!
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே.15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பழநியில் வசந்த உற்சவ விழா எனப்படும் வைகாசி விசாக திருவிழா பெரிய நாயகியம்மன் கோயிலில் மே 15 முதல் 24 வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கிறது. இவ்விழாவையொட்டி மே.15ல் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி பெரியநாயகியம்மன் கோயிலில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணியம் குழுவினர் மூலம் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கொடிமரத்திற்கு முன் புனிதநீர் நிரம்பிய கும்பகலசங்கள் வைத்து விநாயகர், சுப்ர மண்யர் பூஜை, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை கள் செய்தனர். பக்தர்களின் அரோகராசரண கோஷத்துடன் காலை 11.25 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முத்து குமாரசுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம் நாள் (மே 20) மாலை 6.30 மணிக்குமேல் முத்துக் குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. ஏழாம் நாள் மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு பெரியநாயகிஅம்மன் கோயில் தேர் நிலையிலிருந்து புறப்பாடாகி, நான்குரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.