தேசிய வழிபாட்டு மையமாக மாறுமா சபரிமலை?
சபரிமலை: சபரிமலையை தேசிய வழிபாட்டு மையமாக மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பம்பையை துாய்மையாக பராமரிக்க 1000 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய உயர் மட்ட குழுவினர் கேரள முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.சபரிமலையை தேசிய வழிபாட்டு மையமாக மாற்றுவதற்காக கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இவ்வாறு அறிவிப்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்களை தேசிய வழிபாட்டு மையமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழிபாட்டு மையங்களை இணைத்து சுற்றுலா திட்டம் தயாரிக்கும் போது அதில் சபரிமலையை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் பம்பையை துாய்மைாக பராமரிக்க மத்திய அரசு கங்கை ஆக்ஷன் பிளான் மாடலில் 1000 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. மண்டல மகரவிளக்கு காலத்தில் பம்பையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பது, பக்தர்களுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க குன்னாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவது, கழிவு நீர் பம்பையில் சேர்வதை தடுப்பது, பம்பையிலும் சன்னிதானத்திலும் தேவையான அளவு கழிப்பறைகள் கட்டுவது, பம்பையில் துணிகள் வீசுவதை தடுப்பது போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள். இதற்காக மத்திய நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ஜெ.சி.அய்யர் தலைமையில் ஐந்து பேர் குழுவினர் பம்பை ஆறு பாயும் இடங்களை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினறாயி விஜயன் மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மண்டல மகர விளக்கு காலத்தில் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பணிகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஆலோசனை தெரிவித்தார். 15 நாட்களுக்குள் வரைவு அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய குழுவினர் தெரிவித்தனர்.