வேணுகோபால சுவாமி கோவில் ஜூலை 11ல் கும்பாபிஷேகம்
கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற, வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் கும்பாபிஷேகம், ஜூலை 11ல் நடக்கிறது. கோவை மாநகரின் மத்திய பகுதியான, சலீவன் வீதி - ராஜவீதி இணையும் இடத்தில் அமைந்துள்ளது, வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில். மைசூர் மன்னர்களால், கட்டப்பட்ட இக்கோவில், பழமை வாய்ந்ததாகவும், கோவையில் பிரசித்தி பெற்றதாகவும் திகழ்கிறது. கோவிலில், சில மாதங்களுக்கு முன், திருப்பணிகள் துவங்கியது. ஐந்து லட்சம் ரூபாய் செலவில், ராஜகோபுரம், சன்னதி விமானங்கள், அர்த்த மண்டபம், மணி மண்டபம், மகா மண்டபம், சபா மண்டபங்கள் மராமத்து மற்றும் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணி நிறைவடைந்துள்ளது; கும்பாபிஷேகம் ஜூலை 11ல் நடத்தப்படுகிறது. இதற்கான விழா, ஜூலை 9ம் தேதி காலை, 8:30 மணிக்கு, தேவதா பிரார்த்தனையுடன் துவங்குகிறது. காலை, 9:30 மணிக்கு, யாகசாலை பிரவேசம், கலச ஆவாஹனமும், 10:15 மணிக்கு, முதல் கால வேள்விகளும், மதியம், 12:00 மணிக்கு, அலங்கார திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டியும், மாலை, 6:30 மணிக்கு, இரண்டாம் கால வேள்வியும் நடக்கின்றன.
ஜூலை 10ம் தேதி, காலை, 8:30 மணிக்கு, கலச ஆராதனமும், 9:30 மணிக்கு, மூன்றாம் கால வேள்வியும், மதியம், 12:00 மணிக்கு, அலங்கார திருவாராதனமும், மாலை, 6:30 மணிக்கு, நான்காம் கால வேள்வியும் நடக்கிறது. ஜூலை 11ம் தேதி, அதிகாலை, 3:00 மணிக்கு, ஐந்தாம் கால வேள்வியும், 5:15 மணிக்கு, பூர்ணாஹுதி, யாத்ரா தானம், மாத்ரா தானம், விமான கலசங்கள் மூர்த்தி கலசங்கள், கோவிலை வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அதிகாலை, 5:30 முதல் காலை, 6:30 மணிக்குள், விமானங்கள், ராஜ கோபுரம் மற்றும் மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. காலை, 7:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், அலங்கார திருவாராதனம், வேத சாற்றுமுறை, பிரபந்த சாற்றுமுறையும் நடக்கிறது; இரவு, 7:00 மணிக்கு, பெருமாள்,உபயநாச்சிமாருடன்வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். ஜூலை 12 முதல் ஆக., 28 ம் தேதி வரை, 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.