கடம்பாடி கோவிலில் மீண்டும் திருப்பணி
கடம்பாடி: கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவிலில், முடங்கிய முன் மண்டப திருப்பணி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறை, ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில், மாரி சின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 300 ஆண்டுகளுக்கு முன், வேப்ப மரத்தில் சுயம்புவாக உருவான அம்மன் வீற்றிருக்கிறார்.
வழிபாடு: கிராம மக்களால் சிறிய கோவில் அமைக்கப்பட்டு, வழிபாடு நடந்து வந்தது. இங்கு வழிபடுவோரின் வேண்டுதல் நிறைவேறுவதாக கருதி, பக்தர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். துவக்கத்திலிருந்து, கிராமவாசிகளின் அறங்காவலர்கள் நிர்வகித்து வந்த கோவில், சில ஆண்டுகளுக்கு முன், இந்து சமய அறநிலையத்துறையின் பொறுப்பிற்கு சென்றது. இந்நிலையில், பழமையான கோவிலை முற்றிலும் அகற்றி, கருவறை சன்னிதி, மகாமண்டபம், முன்மண்டபம் திருக்குள சுற்றுசுவர் என, 1.5 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் மேற்கொள்ள, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. முதல் கட்டமாக, நன்கொடையாளர்கள் மூலம், 40 லட்சம் ரூபாய் மதிப்பில், 75 அடி நீளம், 31.75 அடி அகலம், 15.75 அடி உயர அளவிலான, கான்கிரீட் முன் மண்டபம் அமைக்கும் பணி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவக்கப்பட்டது.
மீண்டும் பணி: துாண்கள் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், பல மாதங்களாக பணி முடங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் துாண்களின் மேல், தளம் அமைத்து மீண்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளையும், நன்கொடை மூலமே மேற்கொள்வதால், இப்பணியை முதலில் துவக்கி, கருவறை பணியை இறுதியாக மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.