மொண்டிபாளையம் கோவிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்
அன்னுார்: மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று வேத பாராயணத்துடன் துவங்கியது. மேலத்திருப்பதி என்றழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில், 350 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா நேற்று வேத பாராயணங்களுடன் துவங்கியது. அங்குரார்ப்பணம், ரக்சாபந்தனம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு கும்பம் நிறுவுதலும், மாலையில் சாற்று முறையும் நடக்கிறது. 10ம் தேதி காலையில் த்வார பூஜையும், மாலையில் சாந்தி ஹோமமும் நடக்கிறது. 11ம் தேதி காலை 6:00 மணிக்கு விமானங்கள் மற்றும் மூலவருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் பெருமாள் புறப்பாடு நடக்கிறது. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் பார்க்க எல்சிடி டிவி பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.