குருவாயூரப்பன் கோவிலில் பிரதிஷ்டா தின விழா
சென்னை: மடிப்பாக்கம், குருவாயூரப்பன் கோவிலில், பிரதிஷ்டா தின விழா, நாளை துவங்குகிறது. மடிப்பாக்கம், ஐயப்பன் கோவில் வளாகத்தில், கடந்த 2014ல், குருவாயூரப்பனுக்கு கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரண்டாம் ஆண்டு பிரதிஷ்டா தின விழா, பிரம்மோற்சவமாக கொண்டாடப்படுகிறது. நாளை மாலை துவங்கும் இந்த விழாவில், 13ம் தேதி காலை, கணபதி ஹோமம், களப பூஜை, களபாபிஷேகம், உச்சபூஜை ஆகியவை நடத்தப்பட்டு, பகல், 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு, கொடியேற்றம், பகவதி சேவை நடக்கின்றன. வரும், 14ம் தேதி காலை, கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடக்க உள்ளன. 15ம் தேதி காலை, கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராட்டு, கலசாபிஷேகம், உச்சி பூஜை, மஹா தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, ஐய்யபன் கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.