உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் சுப்ரமணியர் திருத்தேர் வெள்ளோட்ட விழா

அவிநாசியில் சுப்ரமணியர் திருத்தேர் வெள்ளோட்ட விழா

அவிநாசி: அவிநாசியில், ஸ்ரீசுப்ரமணியர் திருத்தேர் வெள்ளோட்ட விழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீசுப்ரமணியர் தேர் மிகவும் பழுதடைந்திருந்தது. புதிய தேர் செய்ய, பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டு குழு அறக்கட்டளையினர் முடிவு செய்து, அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்றனர். ஓராண்டாக, தேர் திருப்பணி நடந்து வந்தது. அனைத்து பணியும் நிறைவடைந்த நிலையில், வெள்ளோட்ட விழா, நேற்று காலை, 10:45 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக, தேர் பிரதிஷ்டை ஹோமம் மற்றும் புண்ணியார்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பூஜை மற்றும் ஹோமங்களை, பெங்களூரு வேத ஆகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம், சர்வசாகதம் செய்து நடத்தினார். பூஜிக்கப்பட்ட கலசம், தேர் மீது வைக்கப்பட்டு, நான்கு ரத வீதிகள் வழியாக வெள்ளோட்டம் சென்றது. சிறுவர், சிறுமியர் உற்சாகத்துடன், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என, கோஷமிட்டவாறே தேர் இழுத்தனர்.கவுமார மடாலய ஆதினம் குமரகுருபர சுவாமி, புக்கொளியூர் ஆதினம் காமாட்சிதாச சுவாமி, உதவி ஆணையர் ஹர்ஷினி, செயல் அலுவலர் அழகேசன், பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டு குழுவினர் பங்கேற்றனர். கலெக்டர் ஜெயந்தி, ஸ்ரீசுப்ரமணியர் தேரை பார்வையிட்டார். கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவினரின் காவடியாட்டம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !