சேலம் சிவன் கோவில்களில் ஆனி திருமஞ்சன விழா
சேலம்: சேலத்தில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று, ஆனி மாத உத்திர நட்சத்திரத்தையொட்டி, ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடந்தது.
சேலம், சுகவனேஸ்வரர் கோவில், இரண்டாவது அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், குகை அம்பலவாணசுவாமி கோவில், நாமமலை பஞ்சமுக சோமநாதேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும், நேற்று காலை, 6 மணி முதல், 8 மணி வரை ஆவுடையார் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் திருமணம் நடந்தது. மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவகாமி அம்மன் சமேத நடராஜர் முக்கிய வீதிகள் வழியாக, உலா வந்து பக்தர்களுக்கு சேவை ஸாதித்தார்.
* ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நேற்று, ஆனி திருமஞ்சனத்தையொட்டி, காலை, 9 மணியளவில் கலசம் வைத்து வேள்வி பூஜை நடந்தது. 10 மணியளவில், நடராஜர் சிலைக்கு பால், பன்னீர், தேன், தயிர், இளநீர், எலுமிச்சை, அரிசி மாவு, சந்தனம், குங்குமம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வேள்வியில் வைக்கப்பட்ட கலசநீரை ஊற்றி, சிறப்பு அலங்காரம் செய்தனர். முன்னதாக, மூலவர் காயநிர்மலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜை, நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின், நடராஜர் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆத்தூர் கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், நடராஜருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
*பெத்தநாயக்கன்பாளையம், ஆட்கொண்டேஸ்வரர் கோவிலில், நடராஜர் மற்றும் அம்பாளுக்கு, 108 லிட்டர் பால், தயிர், எலுமிச்சை பழம் மற்றும் பழவகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கேரள செண்டை மேளம் முழங்க சிறப்பு பூஜை நடந்தது.