கோவில் மற்றும் சுற்றுலா புதிய கட்டடங்கள் திறப்பு
சென்னை: அறநிலையத் துறை சார்பில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சிலைகள் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஏழு கோவில்களில், அன்னதானக் கூடங்கள்; நான்கு கோவில்களில், பக்தர்கள் தங்கும் விடுதி, சேவார்த்திகள் ஓய்வுக்கூடம் கட்டப்பட்டுள்ளன. அரியலுார் மாவட்டம், கல்லங்குறிச்சி, கலியுக வரதராஜ பெருமாள் கோவில் பெண்கள் பள்ளி மற்றும் நான்கு கோவில் இடங்களில், கழிப்பறை மற்றும் குளியல் அறைகளும் கட்டப்பட்டுள்ளன. மேலும் குற்றாலம், பராசக்தி மகளிர் கல்லுாரியில், உள் விளையாட்டரங்கம்; ஸ்ரீரங்கம், சேலம் கோவில்களில், பொருட்கள் வைப்பறை, வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மொத்தம், ஒன்பது கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடங்களை, முதல்வர் ஜெயலலிதா, ’வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் திறந்து வைத்தார். சுற்றுலா விடுதி: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ராமேஸ்வரம், ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில், 21 அறைகளுடன், இரண்டு கோடி ரூபாய் செலவில், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதேபோல், நாகை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி கோவில் அருகில், 10 அறைகளுடன், 1.20 கோடி ரூபாய் செலவில், சுற்றுலா பயணிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது. இவற்றையும் முதல்வர், நேற்று திறந்து வைத்தார்.