உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகா வேம்புலியம்மன்... சலவை தொழிலாளர்களின் சாமி!

ரேணுகா வேம்புலியம்மன்... சலவை தொழிலாளர்களின் சாமி!

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று உணர்த்தியவர் தான், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமன். இவரின் தாய் ரேணுகா, குடத்துடன் ஆற்றுக்குச் செல்ல, கந்தர்வர்கள் தேரில் வானில் செல்வதை பார்த்ததால், குடம் ஆற்றில் கரைகிறது. அதை அறிந்த கணவர் ஜமதக்னி, ரேணுகாவை கொல்ல திட்டமிடுகிறார். தாயை கொல்ல, ஒவ்வொரு மகனும் மறுக்க, அவர்களை கல்லாக மாற்றுகிறார். வெட்டிய தலை ஒட்டியது! கடைசியாக, பரசுராமனிடம் ரேணுகா தலையை துண்டிக்க கோடாரி கொடுத்து அனுப்புகிறார். பரசுராமன், ரேணுகாவை துரத்த, அவர் ஒரு சலவை தொழிலாளி வீட்டில் புகுந்தார். அங்கு ரேணுகா தலையை வெட்ட, குறி தவறி சலவை தொழிலாளி கழுத்தில் விழுகிறது. பின்னர், வருந்திய பரசுராமன், தந்தையிடம் தாயை பிழைக்க வைக்க வரம் கேட்கிறார். அவர் வரம் கொடுக்க, சலவை தொழிலாளி உடம்பில், ரேணுகா தலையை வைத்து பிழைக்க வைக்கிறார். அதிலிருந்து, உலகம் போற்றும் கிராம தேவதை கடவுளாக ரேணுகா மாறுகிறார். இந்த ரேணுகா வேம்புலியம்மனுக்கு ஆலந்துாரில் ஆலயம் அமைத்து வழி படுகின்றனர் சலவைத் தொழிலாளிகள். சுற்று வட்டார மக்களும், இந்த அம்மனை கிராம தேவதையாகக் கொண்டாடுகின்றனர்.

300 ஆண்டு பழமை...: கோவிலின் சிறப்பு குறித்து, ரேணுகா வேம்புலி அம்மன் தேவஸ்தான அறக்கட்டளை நிர்வாகி கிருஷ்ணன் கூறியதாவது: இந்த கோவில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பத்து நாட்கள் நடக்கும் உற்சவ நிகழ்ச்சியை, அனைத்து ஜாதியினரின் பங்கும் இருக்கும் வகையில் விழாவை சிறப்பிக்கிறோம். குறிப்பாக, சலவை தொழிலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. கோவிலை சுற்றி, அம்மன், பத்திரகாளி, காயத்ரி தேவி, வைஷ்ணவி, பிரம்மவி, காத்தாயினி, சாந்தகி ஆகிய தேவதைகள் சிலை உள்ளன. பிள்ளையார், ஐயப்பனுக்கும் சிறிய கோவில்கள், இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளே சைவம்...: திருவிழாவின்போது நடக்கும், தீச்சட்டி ஏந்துதல், சூலம் எடுத்தல், குதிரை வாகனம், ரதம் உள்ளிட்ட உருவம் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்குள், மாமிசம் உணவு படையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் வெளியே, கூழ் ஊற்றி, கருவாடு போன்ற அசைவ உணவு பரிமாற அனுமதி உண்டு. வேளச்சேரி, ஆலந்துார், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நந்தம்பாக்கம், கிண்டி பகுதியில் இருந்து, இந்த கோவிலுக்கு வருகின்றனர். திருவிழாவின்போது, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீ மிதிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !