உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்னாசி முனியப்பன் கோவிலில் ஆடி விழா

தன்னாசி முனியப்பன் கோவிலில் ஆடி விழா

பவானி: பவானி, அம்மாபேட்டை அருகில் உள்ள, பூதப்பாடி தன்னாசி முனியப்பன் கோவிலில் நேற்று ஆடிப்பெரு விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அம்மாபேட்டை யூனியனுக்கு உட்பட்ட, பூதப்பாடி மொண்டியபாளையம் கிராமத்தில் தன்னாசி முனியப்பன் கோவில் உள்ளது. இந்தாண்டு, ஆடிப்பெருவிழா கடந்த, 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திருவீதி உலா நடந்தது. நேற்று காலை பக்தர்கள், மேள தாளங்கள் முழங்கிட, காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து, தன்னாசி முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பின்னர், பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. நாளை (5ம் தேதி) மதியம், 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

கோவில் சிறப்பு குறித்து பக்தர்கள் கூறியதாவது: கிராம மக்களின் காவல் தெய்வமான, தன்னாசி முனியப்பன் மிகவும் சத்தி வாய்ந்தது. சேலம், மேட்டூர், தருமபுரி, மேச்சேரி, இடைப்பாடி, அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, ஈரோடு போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தங்களது காரியம் வெற்றி பெற்றால், பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவிலில் உருவம் வைப்பது வழக்கம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !