அறிவிப்போடு நிற்குது இருக்கன்குடி திட்டம்: வருமானம் இருந்தும் பக்தர்கள் வசதிகளில் அஜாக்கிரதை!
சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலை சுற்றுலாதளமாக அரசு அறிவித்தும்,அதை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். கோயிலின் வருமானம் பன்மடங்கு இருந்தும் பக்தர்கள் வசதிகளில் என்னவோ இன்றும் அறநிலையத்துறை அலட்சியத்துடனே உள்ளது. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது விருதுநகர்மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில். பங்குனி, தை, ஆடி தமிழ் மாதங்களின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேன்கள், கார் , பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
பனைமரங்கள்: ஆகஸ்ட் 12ஆடிகடைசிவெள்ளி என்பதால் அன்றைய தினம் பெருந்திருவிழா நடக்க உள்ளது. இந்நிலையில் கோயில் நிர்வாக குளறுபடியால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்படாத நிலை உள்ளது. பக்தர்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க திறந்தவெளியை நாடும் அவல நிலை உள்ளது. கோயில் அமைந்துள்ள இடம் பனைமரங்கள் சூழ்ந்த பகுதியாகும். பல பனைமரங்கள் பட்டு முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இவற்றை கண்காணித்து அகற்ற வேண்டிய கோயில் நிர்வாகம் ஆழ்ந்த மவுனத்தில் உள்ளது. கோடவுனாக மண்டபங்கள் கோயில் வளாகம் சுற்றிலும் தரை வாடகை அடிப்படையில் முறையின்றி வாடகைக்கு விடப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஒதுங்கி நிற்கவும் படுத்துறங்கவும் கடைக்காரர்களின் அனுமதியை பெற வேண்டிய நிலை உள்ளது. பல தங்கும் மண்டபங்கள் குப்பைகிடங்கு, கடைக்காரர்கள் டூவீலர், உடமைகளை பாதுகாக்கும் கோடவுனாகவும் பயன்படுத்துகின்றனர். குப்பை , ஈக்கள் நிறைந்த இடத்தில் வேறு வழியின்றி தங்கி செல்லும் நிலை உள்ளது. கண்ட இடங்களில் குப்பை கொட்டி துப்புரவு பணியாளர்களால் தீ மூட்டுகின்றனர்.
விஷ பூச்சிகள்: கோயிலையொட்டிய ஆண், பெண் கழிப்பறைகள் மட்டும் செயல்படுகின்றன. அர்ச்சுனாநதி அருகில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் செயல்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இங்கு செல்ல முடியாதபடி கருவேல முட்செடிகள் வளர்ந்துள்ளன. பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்தக்கழிப்பறை அருகில் இரவு மற்றும் பகல் நேரங்களில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
கழிவுநீர் குழாய்கள் சேதம்: புதியதாக கட்டப்பட்ட கழிப்பறைகளின் சுவர்களும், கழிவுநீர் குழாய்களும் சேதமடைந்து கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது. அம்மனுக்கு பொங்கல் வைக்கும் மண்டபத்தில் தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. ஆற்றுக்குள் தனியார் அமைத்துள்ள உறைகிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பொங்கல் வைக்க வேண்டிய நிலை உள்ளது.இதனால் பலரும் ஆற்றுக்குள்ளும், தாங்கள் தங்கியிருக்கும் இடத்தின் அருகே பொங்கல் வைத்து செல்கின்றனர்.
50 ரூபாய் வரை வசூல்: இனிப்பு பொங்கல் காரணமாக கோயிலின் சுற்று வளாகம் முழுவதும் ஈக்கள் பஞ்சமின்றி சுற்றித்திரிகின்றன. முடிகாணிக்கை செலுத்த பக்தர்களிடமிருந்து ரூபாய் 10 கட்டணம் வசூல் செய்யப்பட்டாலும், கூடுதலாக 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். இதன் மூலம் ஒரு சிலர் கொளுத்த லாபம் பார்க்கின்றனர். கோயிலில் அம்மனை தரிசிக்க சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்கப்பட்ட போதும், வி.ஜ.பி. ,பாஸ், வி.வி.ஐ.பி., பாஸ் என்ற முறையில் பலர் சிறப்பு தரிசன வரிசையின் இடையில் புகுந்து அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
பரிவார தெய்வங்கள்: இதனால் சிறப்பு தரிசனம் கட்டணம் செலுத்தியவர்களும் அம்மனை பார்க்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. போதுமான இடவசதி இருந்தும் பக்தர்கள் நெரிசலில் சிக்கி திணறும் நிலை உள்ளது.
மாரியம்மனின் பரிவார தெய்வங்களை வணங்க முடியாத படி கோயில் பரம்பரை பூஜாரி பெண்கள் தட்டுடன் நின்று தட்சணை போட வலியுறுத்துகின்றனர். விநாயகர், காத்தவராயன், வெயில்காத்தம்மன், துர்க்கையம்மன், கருப்பசாமி ஆகிய பரிவார சுவாமிகளை தரிசிக்க வரும் பக்தர்கள் பூஜாரி பெண்கள் தட்டுடன் நிற்பதை பார்த்து வேண்டிக்கொள்ள வந்ததை, வேண்டாமல் பாதியில் திரும்பி செல்கின்றனர்.
பணக்கஷ்டம்: கை, கால் நேர்த்திக்கடன் செலுத்த சென்றாலும் இதே நிலை உள்ளது. திருநீறு கேட்டால் காணிக்கை, பூசினால் காணிக்கை என்பதால் பல பக்தர்கள் மாரியம்மனை தரிசித்த கையோடு வெளியேறி விடுகின்றனர். மொத்தத்தில் அமைதி தேடி வரும் பக்தர்கள் பல இன்னல்கள் இடையே மனக்கஷ்டத்தை தொலைந்து விட்டு, பணக்கஷ்டத்துடன் திரும்பிச்செல்லும் நிலை உள்ளது.
தங்கும் வசதியின்றி பக்தர்கள் தவிப்பு
மாரியப்பன்: கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் வசதியின்றி கடும் அல்லல்படுகின்றனர். ஆஸ்பெஸ்டாஸ், தகர கூரைகளுடன் இலவச தங்கும் மண்டபங்கள் கோயில் அருகில் உள்ளது. ஆனால் இவற்றில் ஓட்டல்கள், டீக்கடைகள், குழுந்தைகள்விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகள் நடத்த கோயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதனால் பக்தர்கள் தங்க இடமின்றி பொட்டல் காடு , கீற்றுக்கொட்டகையில் தங்கி அவதிப்படுகின்றனர். நவீன வசதிகளுடன் குறைந்த வாடகையில் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் கூடுதலாக விடுதிகள் அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.