உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கோலாகலம்

மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கோலாகலம்

இடைப்பாடி: இடைப்பாடியில், மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் நடந்த விழாவில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். இடைப்பாடியில் உள்ள மேட்டுத்தெரு, க.புதூர், ஆலச்சம்பாளையம், வெள்ளாண்டிவலசு பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில்களில், கடந்த வாரம், பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கி நடந்துவந்தது. மேட்டுத்தெரு மாரியம்மன், க.புதூர் காளியம்மன் சுவாமிகளின் திருக்கல்யாணம், கடந்த, 10ம் தேதி நள்ளிரவு நடந்தது. 11ம் தேதி காலை, தீ மிதி விழாவில், மேட்டுத்தெரு மாரியம்மன் கோவிலில், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், க.புதூர் காளியம்மன் கோவிலில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் தீ மிதித்தனர். அதில், ஆம்னி வேன் இழுத்தல், இளநீர் காய்களை கட்டி, முதுகில் அலகு குத்தி வந்து தீ மிதித்தனர். ஆறு பக்தர்கள், அலகு குத்தி, அந்தரத்தில் தொங்கியபடி வந்து தீ மிதித்தனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

* சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், கடந்த, 26ம் தேதி, பூச்சாட்டுதலுடன் ஆடிப்பண்டிகை துவங்கி நடந்து வருகிறது. அதில், நேற்று முன்தினம் தங்கக்கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். நேற்று, பொங்கல் வைத்தும், உருளுதண்டம் போட்டும், அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, மூன்று நாட்களாக, பக்தர்கள் பொங்கல் வைத்தனர். அதேபோல், களரம்பட்டி பாலநாகம், அம்மாபேட்டை செங்குந்தர், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, பட்டைகோவில் ஆகிய மாரியம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.

* வாழப்பாடி அருகே, முத்தம்பட்டி கிராமம், வடக்குகாடு, பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழாவையொட்டி, நேற்று, ஏராளமான பக்தர்கள், அக்னி கரகம் எடுத்து, அலகு குத்தி, ஊர்வலம் வந்தனர். மாரியம்மன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !