சேதுக்கரை கடற்கரையில் குவிந்த சாமி சிலைகள்!
கீழக்கரை: சேதுக்கரை கடற்கரை மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. ராமாயணத்தில் விபீஷணன், ராமனிடம் சரணாகதி அடைந்த இடம் சேதுக்கரையாக விளங்குகிறது. இங்கு கடற்கரை முன்புறம் சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம், திதி உள்ளிட்ட சங்கல்ப பூஜைகள் செய்வதற்காக வருகின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கோயில்களில் உள்ள சிலைகள் சேதமடைந்தாலோ, பழைய சிலைகள் இருந்தாலோ அதனை சேதுக்கரை கடலில் விட்டுச்செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. கடற்கரையோரங்களில் விட்டுச்செல்லும் கற்சிலைகள், அங்கு புனித நீராடும் பக்தர்களின் பாதங்களை பதம் பார்க்கிறது. கடற்கரையில் இருந்து 20 அடி தொலையில் போடப்பட்ட சிலைகளை தேடிஎடுத்து அதனை, கடற்கரையோரமாக வரிசையாக அடுக்கி வைத்துள்ளனர். இதனால் கடற்கரையோரத்தில் பழமை வாய்ந்த சிலைகள் அதிகளவில் உள்ளன.