ஊட்டியில் மாதா தேவாலய திருவிழா
ஊட்டி: ஊட்டி புனித மோட்ச ராக்கினி மாதா தேவாலய திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. ஊட்டி புனித மோட்ச ராக்கினி மாதா தேவாலயத்தின், 178 வது ஆண்டு, கடந்த, 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி, மாலை, பல்வேறு குருக்களின் தலைமையில், சிறப்பு நவநாள், மறையுரை, திருப்பலி நடத்தப்பட்டது. விழா நாளான நேற்று, மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ், தேசிய கொடியேற்றி,“கட்டுக்கோப்புடன் செயல்படுவது தான், சுதந்திரம்,” என்றார். பின், அவரது தலைமையில் ஆடம்பர திருப்பலி நடந்தது. பங்கு குரு வின்சென்ட், உதவி குரு எட்வின் சார்லஸ், குருக்கள் வில்லியம், சகாய தாஸ், அடைக்கலம், சாலமன் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர். தேவாலய பங்கு அளவில், கடந்த, 10ம் வகுப்பு பொது தேர்வில், முதலிரு இடங்களை பிடித்த மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு, புனித ஜோசப் தேவாலய பங்கு குரு சோனி தலைமையில், மலையாள திருப்பலி நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, மறை மாவட்ட புதிய குருக்கள் தலைமையில் சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து, ஆடம்பர தேர் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், தேவ அன்னை, பஸ் ஸ்டாண்டு வரை பவனி சென்று, ஆசிர் வழங்கினார். விழா ஏற்பாடுகளை பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்திருந்தனர்.