உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கோலாகலம்

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கோலாகலம்

திருநெல்வேலி: சங்கரன்கோவிலில் நடந்த ஆடித்தபசு திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடக்கும் ஆடித்தபசு விழா பிரசித்திபெற்றது.சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் ஆடி மாதத்தில், கோமதிக்கு சுவாமி சங்கரநாராயணராக, சங்கரலிங்கசுவாமி காட்சியளிக்கும் வைபவம் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தபசுத் திருவிழா கடந்த 6ம் தேதி காலை 5:57 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அம்பாள் ரதவீதி உலா நடந்தது.

இரவில் சப்பரங்களில் வீதிஉலா வந்தார். 9ம் திருநாளன்று கடந்த 14ம் தேதி கோமதி அம்பாள் தேரோட்டம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசுக் காட்சி நேற்று நடந்தது. கோயிலில் இருந்து காலை 11.45 மணிக்கு கோமதியம்பிகை தவக்கோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தெற்குரதவீதியில் உள்ள தபசுமண்டபத்தை அடைந்தார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் சுவாமி சங்கர நாராயணர், அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி தெற்குரத வீதியில் உள்ள தபசு பந்தலை அடைந்தார். தபசு மண்டபத்தில் கோமதி அம்பாள் ஒற்றைக்காலில் தவம் செய்யும் கோலத்துடன் தங்கச்சப்பரத்தில் தவசு பந்தலுக்கு வந்தார்.சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்த பிறகு சுவாமி, அம்பாளுக்கு பட்டு, பரிவட்டம், மாலை மாற்றும் வைபவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கோமதி அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார்.அப்போது சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. கூடியிருந்த பக்தர்கள் சங்கரா, நாராயணா.. என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். இரவு 12:00 மணிக்கு சுவாமி வெள்ளியானை வாகனத்தில் எழுந்தருளி மீண்டும் தபசு பந்தலுக்கு வந்து அம்பாளுக்கு சங்கரலிங்கமாக காட்சி கொடுத்த இரண்டாம் தவசுக்காட்சி நடந்தது. இதையடுத்து சுவாமி, அம்பாள் இருவரும் வீதிஉலாவாக கோயிலுக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !