உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை உண்டியலில் பணம் போடாதீங்க : ஐயப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்

சபரிமலை உண்டியலில் பணம் போடாதீங்க : ஐயப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்

பழநி: சபரிமலை ஐயப்பன்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் உண்டியலில் பணம் போடுவதை தவிர்க்க வேண்டும் என, சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜன் தெரிவித்தார். பழநியில் அவர் கூறியதாவது: சபரிமலை சீசன் நவம்பரில் துவங்க உள்ளது. மண்டல காலம், பக்தர்களுக்கான நிரந்தர வசதிகள் குறித்து கேரள முதல்வர் பிணராயி விஜயன், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், அமைச்சர்கள் பங்கேற்ற

ஆலோசனை கூட்டம் பம்பையில் நடந்தது. அதில் கேரள முதல்வர் திருப்பதி போல சபரிமலையிலும் ரூ.1000, ரூ.1300 தரிசன கட்டணம் வசூலிக்கலாம், ஆண்டுமுழுவதும் கோயிலை திறக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார். அதற்கு தேவசம்போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். கேரள முதல்வருக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம். ஏனெனில் தற்போதைய முறையில் 8 மணி நேரம் முதல் 12 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். கட்டண தரிசனத்தை அமல்படுத்தினால் பணமுள்ளவர்களே எளிதில் சுவாமி தரிசனம் செய்வர். ஆனால் ஏழைகள் 24 மணிநேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்படும். சபரிமலை வருமானத்தின் பெரும்பகுதி கேரள அரசுக்குசெல்கிறது. மேலும் வருமானத்தை அதிகரிக்கவும், புனித தலத்தை வியாபார தலமாக்கி பக்தர்களை சுரண்டும் கேரள அரசு முயற்சி செய்கிறது. அரவணை, பாயாசம், அப்பம் உள்ளிட்ட பிரசாதத்தையும் இருமடங்கு உயர்த்தியுள்ளனர். இவற்றை கண்டித்தும், சபரி மலை செல்லும் பக்தர்கள் உண்டியலில் பணம் போடாதீங்க என வலியுறுத்தி இந்து அமைப்புகளுடன் நாடு முழுவதும் மாவட்டம்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி என்பதில் அரசியல்வாதிகள் முடிவு எடுக்கக் கூடாது. ஆன்மிக பெரியவர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும். எங்கள் அமைப்புமூலம் சபரிமலை பக்தர்களுக்கு சாப்பாடு, குடிநீரை இலவசமாக செய்துதர தயாராக உள்ளோம். ஆனால் கேரள அரசு அனுமதிக்க தயாராக இல்லை,” என்றார். தமிழ்நாடு அமைப்பு செயலாளர் ஹரி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !