உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்!

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு, மூன்று லட்சம் ரூபாய் நோட்டுகளால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சாவூர் அடுத்த புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், ஆவணி திருவிழா, 16ம் தேதி துவங்கியது. இதை முன்னிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. முதல் ஞாயிற்றுக் கிழமை, அம்மனுக்கு மூலிகை அலங்காரமும், இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையான நேற்று, ரூபாய் நோட்டு அலங்காரமும் செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து, மூன்று லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. 10, 20, 50, 500 மற்றும், 1,000 ரூபாய் புதிய கரன்சி நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். பொதுமக்களிடம் மீண்டும் ரூபாய் நோட்டுகள் ஒப்படைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !