உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை வைகை கரையில் ’வெள்ள விநாயகர்!

மானாமதுரை வைகை கரையில் ’வெள்ள விநாயகர்!

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தில், வைகையாற்றங்கரையில் நுாற்றாண்டுகளை கடந்த, ’வெள்ள விநாயகர்’ அருள் பாலித்து வருகிறார். வைகை ஆற்றங்கரையில் கீழப்பசலை கிராமம் உள்ளது. இங்கு விவசாயம் தவிர்த்து வேறு எந்த தொழிலும் இல்லை. வெள்ள விநாயகர் குறித்து கிராம பெரியவர் சங்கையா கூறியதாவது: கீழப்பசலையில், 1,500 குடும்பங்கள் உள்ளன. விவசாயம் தான் பிரதான தொழில். நாற்று நடுவதில் தொடங்கி அறுவடை வரை நடக்கும் அனைத்து பணிகளும் நிறைவேற விநாயகரை வழிபட்டு தான் தொடங்குவோம்.

அறுவடை முடிந்த பின் விநாயகருக்கு படைத்த பின் தான் வீட்டிற்கு கொண்டு செல்வோம். வெள்ள நீரால் அடித்து வரப்பட்டு சரியாக, கீழப்பசலையில் கரை ஒதுங்கிய விநாயகர் இவர். தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி நிலவினாலும் இன்று வரை கீழப்பசலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதே இல்லை. விவசாயமும் குறைவின்றி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கிராம மக்கள் கூறுகையில், ’இன்று வரை விநாயகருக்கு கோயில் கட்ட முயற்சி செய்யாமல் அரச மரத்தடியில் வைத்தே வணங்கி வருகிறோம். அரச மரம் தான் விநாயகரின் இருப்பிடம். கோயில் கட்டி அதனுள் விநாயகரை வைக்க விரும்பவில்லை. அனைவரும் வழிபட, திறந்த நிலையில் விநாயகர் இருப்பது தான் வசதி’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !