சென்னையில் 2512 இடங்களில் விநாயகர் சிலைகள்
சென்னை : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னையில் 2,512 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 30 அடி உயரம் வரை சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனுமதி இன்றி பொது இடங்களில் யாரும் சிலைகளை வைக்கக்கூடாது என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக சிலைகள் வைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். திருவல்லிக்கேணி, புளியந்தோப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்கப்படும் பெரிய சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு டி.ஜி.பி.அசோக்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். சென்னையில் 20,000 போலீசாரும், தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசாரும் விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னை நகரில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும் நிகழ்ச்சி வருகிற 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெறுகிறது. சென்னை நகரில் நீலாங்கரை பல்கலை நகர், பட்டினப்பாக்கம் சீனிவாச நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய 5 இடங்களில் கடலில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.