அயோத்தியை விட புண்ணிய தலம்? வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம்
திருப்பூர்: ""ராமன் அவதரித்த அயோத்தியாவை விட, முதன்மையான பூமி, ராமாயணம் தோன்றிய பிட்டூர், என, ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். ராமாயணம் குறித்த ஆன்மிக தொடர் சொற்பொழிவு, திருப்பூர் காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடைபெற்று வருகிறது."நவ புண்ணிய ஸ்தலங்கள் குறித்து, சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது: இந்த பூமியுடன் ஈரேழு பதினான்கு லோகங்களையும் ஆளும் ராமன், இந்த புண்ணிய பூமியாம் பாரத பூமியிலே, அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை, தன் காலடி பட நடந்தார். ராமன் காலடி பட்ட இடமெல்லாம் புண்ணிய ஸ்தலங்களே. அவரது அவதாரங்கள் எண்ணில் அடங்காதது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு சிறப்பு உள்ளது. மலை, நதி, காடு, கோவில், குளம், ஊர் என அனைத்துமே, இறைவனோடு தொடர்புள்ளது. தியாகம், வேள்வி, தீர்த்த யாத்திரை, கல்வி, தானம், தர்மம் என, எதை எங்கு செய்ய வேண்டும் என உள்ளது. அப்படி செய்யும் போது தான், அதற்குரிய பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு பிறவிக்கும் காரணம் கர்மம். இறைவன் அவதாரம் கருணையால் தோன்றியது; மனிதப்பிறவி கர்மாவால் ஏற்பட்டது. இதில் தீய கர்மாவால் ஏற்பட்ட பிறவி, கடினமான கர்மாக்களை கொண்டது. இதை கரைக்க, இறை சேவை செய்ய வேண்டும். அதற்காகவே புண்ணிய ஸ்தலங்களை தேடி செல்கிறோம். யாத்திரையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். யாத்திரை செல்ல வேண்டிய நவ புண்ணிய ஸ்தலங்கள், பிட்டூர், அயோத்தியா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, உஜ்ஜயின் மற்றும் துவாரிகா ஆகியன. இதில் முதன்மையான இடம் பிட்டூர். பூலோகம் வந்த பிரம்மன், முதலில் காலடி வைத்த இடம் இங்குள்ளது. வால்மீகியின் ஆஸ்ரமம் உள்ளது. ராமாயணம் எழுத துவங்கிய இடம் இது. ராமன் பிறந்த இடத்தை விட, ராமாயணம் துவங்கிய இடம் முதன்மையானது. ராமனின் புராணத்தை நாம் அறியச்செய்த இடம், பிட்டூர். எனவே, அயோத்தியாவை காட்டிலும் இது முதன்மையானது. இவ்வாறு, அவர் பேசினார்.