பூஜை பொருள் விற்பனை வாழும் மதநல்லிணக்கம்
மேலுார்: மேலுாரில் ஐப்பசி அமாவாசையன்று பஜனை மடத்தில் நடக்கும் கவுரி நோன்பு வழக்கம் போல் இந்த ஆண்டும் விமரிசையாக நடக்கிறது. சுமங்கலி பெண்கள் ஒன்று சேர்ந்து மண்ணில், கவுரி (சாமி) சிலைகள்செய்தனர். பிறகு கணவர் முன்னிலையில் சிலைகளுக்கு பூஜை செய்து விட்டு பெண்கள் புதிய மஞ்சள் கயிறு அணிந்தும், ஆண்கள் கையில் மஞ்சள் கயிறு கட்டினர். இச் சிலைகளை இன்று (அக்.31) சாலக்கரையான் கண்மாயில் கரைக்கப்பட உள்ளது. இந் நிகழ்ச்சிக்கு உரிய பூஜை பொருட்களை இஸ்லாமிய பெண் நுார்பீவி விற்று வருகிறார். கவுரி நோன்பு கொண்டாடுபவர்கள் அவரிடம் பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மதநல்லிணக்கத்திற்கு இதை இப்பகுதியினர் உதாரணமாக கொண்டுள்ளனர்.
நுார்பீவி கூறியதாவது: கடந்த 80 ஆண்டு பாரம்பரியமாக கவுரி நோன்பிற்கு உரிய பூஜை பொருட்களை விற்று வருகிறோம். பூஜை பொருட்கள் விற்பனை செய்வதால் 20 நாட்கள் அசைவம் சாப்பிடாமலும், வெளியில் சாப்பிடாமல் விரதமிருந்து மஞ்சள் கயிறு, சூடம், சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கிறேன். இந்த விழாவில் பங்கேற்கும் அனைவரும் என்னிடம் இப்பொருட்களை வாங்குவது மகிழ்வாக உள்ளது என்றார்.