திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா துவக்கம் : விரதம் துவக்கினர் பக்தர்கள்
துாத்துக்குடி: முருக பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில், சூரசம்ஹார விழா, நேற்று, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பக்தர்கள் புனித நீராடி, பச்சை ஆடை அணிந்து விரதம் துவக்கினர்; 5ம் தேதி, சூரசம்ஹாரம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, 1:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு, விஸ்வரூபம், 2:00 மணிக்கு, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன், யாக சாலையில் எழுந்தருள பூஜை துவங்கியது. மூலவருக்கு காலை, 9:00 மணிக்கு, உச்சிகால அபிஷேகம் நடந்தது. பின், யாகசாலையில், பூர்ணாகுதியுடன், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கடல், நாழிக்கிணற்றில் நீராடி, பச்சை ஆடை அணிந்து, அங்கபிரதட்சணம் செய்து விரதம் துவக்கினர். நவ., 5 மாலை, 4:30 மணிக்கு, கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது.
பழநி: பழநியில் துவங்கிய விழாவின் முதல் நாளான, நேற்று, மலைக்கோவிலில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையில் மூலவர் ஞானதண்டாயுதபாணி, உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், நவவீரர்களுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது.அதே நேரத்தில், பக்தர்களும் தங்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவங்கினர். இதை போல், திருஆவினன்குடி கோவில், பெரியநாயகியம்மன் கோவில்களிலும், முருகப் பெருமானை வழிபட்டு, ஏராளமான பக்தர்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர்.
சுவாமிமலை: முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காவது படைவீடாக, கும்பகோணம் அருகே உள்ள, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இங்கு, கந்த சஷ்டி திருவிழா, நேற்று காலை, 9:00 மணிக்கு, சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன், மலைக்கோவிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.