உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை குறித்த தகவல்களை அறிய புதிய இணையதளம்

சபரிமலை குறித்த தகவல்களை அறிய புதிய இணையதளம்

பத்தனம்திட்டா : சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக, பல்வேறு தகவல்கள் உள்ளடக்கிய, "சபரீச சேவா என்ற பெயரிலான, புதிய இணையதளத்தை மாநில அரசு துவக்கியுள்ளது. சபரிமலையில் செய்யப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் குறித்து பக்தர்கள் அறியாமல் உள்ளனர். இப்பிரச்னைகளை களைய, மாநில அரசு சபரீச சேவா என்ற பெயரில், புதிய இணையதளத்தை (வெப் சைட்) உருவாக்கியுள்ளது.

இத்திட்டத்தை மாநில அமைச்சர் அடூர் பிரகாஷ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். "இப்புதிய சேவை மூலம் சபரிமலையில் சேவையாற்ற விரும்பும் தன்னார்வ தொண்டர்கள் தங்களை குறித்து, தகவல்களையும் பதிவு செய்ய இயலும். சன்னிதானம், பம்பை உள்ளிட்ட முக்கிய இடங்களில், இதயநோய் சிகிச்சை பிரிவு செயல்படும்.

இதற்கான பணியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனியார் இதய நோய் சிகிச்சை மருத்துவமனை டாக்டர்கள் சேவை அளிக்க உள்ளனர். சபரிமலை மற்றும் பம்பையில் செயல்படும் மருத்துவமனைகளுக்கு பல்வேறு புதிய உபகரணங்கள் வாங்க, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு (2012) சபரிமலையில் மண்ட, மகர ஜோதி உற்சவத்திற்கு முன்பாக அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் செயல்படும் என, அமைச்சர் அடூர் பிரகாஷ் தெரிவித்தார். புதிய இணைய தளத்தின் முகவரி : www.sabarisasewa.kerala.gov.in..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !