நந்தி, குபேரலிங்கம் சிலை: ஆத்தூர் மக்கள் வழிபாடு
ஆத்தூர்: இரும்பாலை அருகே, பிரதிஷ்டை செய்யப்படவுள்ள குபேரலிங்கம் மற்றும் நந்தி கற்சிலைகள், நேற்று, ஆத்தூரில், சிவதொண்டர்களின் மேள, தாளம் முழங்க, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
சேலம், இரும்பாலை முதல் கேட் அருகே, ஓம் சக்தி நகரில், ஒரே இடத்தில், 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் மத்தியில், குபேரலிங்கம் மற்றும் வெங்கடேச பெருமாள் கற்சிலைகள், நவ., 13ல், பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபி ?ஷகம் செய்யப்படவுள்ளது. அதற்காக, அவினாசி அருகே, திருமுருகன் பூண்டியில் உள்ள சிற்ப கலைக்கூடத்தில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில், ஏழே முக்கால் அடி உயர குபேரலிங்கம், ஐந்து அடி உயர மகா நந்தி சிலைகள் வடிவமைக்கப்பட்டன. கடந்த, அக்., 24ல், கோவையில் இருந்து, பெரிய டாரஸ் லாரியில், குபேரலிங்கம், மகாநந்தி சிலைகள், சேலம் கொண்டு வரப்பட்டன. நேற்று மதியம், 3:00 மணியளவில், ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகர் பகுதிக்கு, சிவத்தொண்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட குபேரலிங்கம், நந்தி சிலைக்கு, மாலைகள், ரூபாய் நோட்டுகள் அணிவித்து, மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில் வரை சென்று, முக்கிய வீதி வழியாக எடுத்துவரப்பட்டது. அச்சிலைகளை பார்த்த மக்கள், வழிபாடு செய்தனர்.