உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களின் சிரமம் குறைத்த சீர்பாதங்கள்!

பக்தர்களின் சிரமம் குறைத்த சீர்பாதங்கள்!

மதுரை: வாடிப்பட்டி பொன்பெருமாள் மலைக்கு செல்ல படிக்கட்டுகள் இல்லாமல் கரடு முரடான முரட்டுப்பாதையில் நடந்து செல்ல இயலாமல் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். இதில் முதியோர் மலையேற பட்டபாடு சொல்லி மாளாது.பெருமாளே இது என்ன சோதனை... மாதவா... உன்னை தரிசிக்க ஏற்படும் சிரமத்தை தவிடு பொடியாக்கு,’ என பெருமாளின் பக்தர்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டனர். இதற்கிடையே திருவேடகம் விவேகானந்த கல்லுாரி என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மற்றும் இளம் விளையாட்டு வீரர்கள் என மாணவ படையினர் பொன்பெருமாள் மலைக்கு கடந்த மே 6ம் தேதி சென்றனர். பின், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மலையில் முகாமிட்டு மொத்தம் 564 படிக்கட்டுகளை ஒரு மாதத்திற்குள் நேர்த்தியாகவும், உறுதித்தன்மையுடனும் அமைத்து கடந்த ஜூன் 6ம் தேதி பக்தர்களுக்கு அர்ப்பணித்தனர். தற்போது இளையோர் முதல் முதியோர் வரை பக்தர்கள் பொன்பெருமாள் மலைக்கு படையெடுத்து வருகின்றனர். பெருமாளே இது என்ன சோதனை’ என வேண்டிய பக்தர்கள் பெருமாளே உன் கருணைக்கு அளவே இல்லையா,’ என மகிழ்ச்சி பொங்க மலையேறி பெருமாளை மனம் குளிர சேவித்து வருகின்றனர்.

உடற்கல்வி இயக்குனர் சீனிமுருகன், கல்லுாரியில் செயல்படும் அப்பர் சுவாமிகள் உழவாரக்குழுவை சேர்ந்த மாணவர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இணைந்து இச்சேவையை செய்தனர். வறண்ட மலையை சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறோம்,’’ என்றார். ஆசிரியர் சந்திரசேகரன், ஒரு யூனிட்டிற்கு 50 மாணவர்கள் என இரண்டு யூனிட் மாணவ குழு அமைத்து படிக்கட்டு கட்டுமானப்பணியை செய்தோம். கல்லுாரி செயலர் சுவாமி நியமானந்தா மகராஜ், முதல்வர் ராமமூர்த்தி  முயற்சியால் அடிவாரத்தில் ஜெயவீர ஆஞ்சநேயர், மலை மீது பெருமாள் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மலை மீது குடிநீர் வசதி உண்டு,’’ என்றார். விழாக்களின் போது வீதி உலா வரும் சுவாமி சப்பரங்களை சுமந்து வரும் சீர்பாதங்கள் போல் பொன்பெருமாள் மலைக்கு செல்ல படிக்கட்டுகளை அமைத்து பக்தர்களின் பாதங்களை சுமக்கும் சீர்பாதங்களாக மிளிரும் மாணவர்களின் மகத்தான சேவை பாராட்டுக்கு உரியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !