பழநி கோயிலில் பசும்பால் விற்பனை செய்ய வலியுறுத்தல்
பழநி: பழநி ஞானதண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பசும்பால் விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடான பழநிக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். அவர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் குறைந்த விலையில் தேங்காய், வாழை, விபூதி அடங்கிய அர்ச்சனை பொருட்கள் விற்கப்படுகிறது. அதேசமயம் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் பால் மலைக்கோயிலில் விற்பது இல்லை. இதுபற்றி விபரம் அறியாத வெளியூர் பக்தர்கள் மலைக்கு மேலே சென்றபின் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யமுடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் வெளியே அடிவாரம் கடைகளில் கார்த்திகை, சஷ்டி போன்ற முக்கிய தினங்களில் அபிஷேக பால் ஒரு லிட்டர் ரூ.48 வரை விற்கின்றனர். எனவே பழநிகோயில் நிர்வாகம் மலைக்கோயில் வெளிப்பிரகாரம் அல்லது வின்ச், ரோப்கார், யானைப்பாதை, படிப்பாதையில் ஆவின் பாலகம் மூலம் பசும்பால் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.