ஜெ.,க்கு கோவில் கட்டிய தஞ்சை கவுன்சிலர்
 தஞ்சாவூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தஞ்சையில்  கவுன்சிலர் ஒருவர் கோவில் கட்டி வருகிறார். தஞ்சாவூர் மேல வீதி, கொங்கணேசுவரர் கோவில் அருகே, ‘புரட்சித் தலைவி அம்மா ஆலயம்’ என்ற பெயரில், 130 சதுர அடியில், 1.50 லட்சம் ரூபாய் செலவில், ஒரு கோவில் கட்டப்படுகிறது. கோவிலுக்கான சுவர் எழுப்பப்பட்டு, மேற்கூரை வேயப்பட்டு, பீடங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இதில், ஒன்றரை அடி உயரத்தில், ஜெயலலிதாவின்  வெண்கல சிலை வைக்கப்பட உள்ளது.
பீடத்தின் மேல்புறம், ‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. கோவிலை கட்டி வரும், அதே பகுதியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் சுவாமிநாதன் கூறியதாவது: இக்கோவில் கட்டும் பணியை, 7ம் தேதி துவக்கினேன். கட்டுமான பணி முடிந்துவிட்டது.  சுவாமிமலையில் சிலை வடிவமைக்க, ‘ஆர்டர்’ கொடுக்கப்பட்டுள்ளது; ஒரு மாதத்துக்குள் வந்துவிடும். ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்., 24ல், சிலையை பீடத்தில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.  பீடத்தில் தற்காலிகமாக, ஜெயலலிதா புகைப்படம் வைக்கப்பட உள்ளது. பக்கவாட்டின் இரு புறமும் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., புகைப்படங்கள் வைக்கப்படும். இக்கோவிலை திறக்க, தெற்கு மாவட்ட செயலர் வைத்திலிங்கத்திடம் கேட்டுள்ளேன்; ஓரிரு நாளில், கோவில் திறக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.