குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் மண்டபம் கட்டும் பணி மந்தம்
தேனி: குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் ரூ. 1.10 கோடியில் மகா மண்டபம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பிரசித்த பெற்ற இக்கோயிலுக்கு தேனி மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு உகந்த நாள் என்பதால் மற்ற நாட்களைவிட கூட்டம் அதிகம் இருக்கும். தோஷங்களுக்கு இங்கு பரிகார பூஜைகள் நடப்பதால், குடும்பத்தோடு பக்தர்கள் பங்கேற்பர்.
ஆமை வேகம்: பக்தர்களின் பயன்பாட்டிற்காக கோயில் வளாகத்தில் அர்த்தமண்டபம், மகா மண்டபம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. ‘மெகா’ துாண்கள் அமைக்க 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. 5 அடி ஆழத்திற்கும் மேலாக குழி தோண்ட வேண்டியுள்ளதால் ஊற்றுப் போல் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. இதனால், தண்ணீரை வெளியேற்றி துாண்கள் எழும்பும் பணி நடந்து வருகிறது. விறுவிறுப்பு இல்லாததால் குழிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், கட்டுமான பணிகள் மந்தமாக உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
நீர் ஊற்றால் சிரமம்: நிர்வாக அதிகாரி கிருஷ்ணவேணி கூறுகையில்,“ அறநிலையத் துறை சார்பில் ரூ.35 லட்சம், கோயில் பொது நிதியில் இருந்து ரூ. 75 லட்சம் ஆக மொத்தம் ரூ. 1.10 கோடி மதிப்பீட்டில் மகா மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் பணிகள் பல நாட்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. துாண்கள் அமைக்கும் பணியில் தண்ணீரால் தாமதம் ஏற்பட்டுள்ளது. பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,”என்றார்.