9 ஆண்டுகளுக்கு பின் கோவில் அறை திறப்பு: மூட்டை, மூட்டையாக கிடந்த ரூ.40 லட்சம்
பவானி: பவானி அருகே, ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட, கோவில் அறையில், மூட்டை, மூட்டையாக, 40 லட்சம் ரூபாய் இருந்தது.
ஈரோடு மாவட்டம் பவானி, பருவாச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்டது அம்மன்பாளையம். இங்கு மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலை யார் நிர்வாகம் செய்வது என்பது தொடர்பாக, இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பொங்கல் விழா நடத்திக் கொள்வது எனவும், கோவில் செலவு போக மீதமுள்ள பணத்தை, அருகில் உள்ள ஒரு சிறிய அறையில் வைத்து பூட்டி வைக்க, முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த, 2007ல், கோவில் உண்டியல் காணிக்கை, பண அறையில் உள்ள இரண்டு பீரோக்களில் வைத்து, அறைக்கு, சீல் வைக்கப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, டிச., 31ல் முடிகிறது. இதனால் அறையில் வைத்து பூட்டப்பட்ட பணத்தை எண்ண முடிவு செய்யப்பட்டது. பவானி தாசில்தார் குணசேகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில், ஈரோடு அறநிலையத்துறை ஆய்வாளர் பாலசுந்தரி, பவானி ரவிக்குமார் ஆகியோர், சீல் வைத்த அறையை, நேற்று மாலை திறந்தனர். அறையில் பல மூட்டைகளில் ரூபாய் நோட்டுகள் கட்டப்பட்டு கிடந்தன.
ஒரு இரும்பு பீரோவை திறக்க முடியவில்லை. அதை திறக்க அதிகாரிகள் போராடினர். பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, பீரோ உடைக்கப்பட்டது. அனைத்து பண மூட்டைகளும், கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, மக்கள் முன்னிலையில் எண்ணும் பணி பல மணி நேரம் நடந்தது. இதில், 30.92 லட்சம் ரூபாய் நோட்டுகள், நல்ல முறையில் இருந்தன. நான்கு லட்சத்து, 73 ஆயிரம் ரூபாய் சேதமடைந்திருந்தது. பயன்படுத்த முடியாத வகையில், ஒரு லட்சம் ரூபாய் இருந்தது. நான்கு லட்சம் ரூபாய்க்கு சில்லரை காசுகள் இருந்தன. இதில்லாமல், ஐந்து தங்க நாணயம், ஐந்து வெள்ளி பொருட்கள் இருந்தன. இவை அனைத்தும், அந்தியூரில் உள்ள கரூர் வைசியா வங்கியில், மாரியம்மன் கோவில் பெயரில், இன்று (20ம் தேதி) கணக்கு துவங்கப்பட்டு டிபாசிட் செய்யப்படவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.