தேய்பிறை அஷ்டமி: கால பைரவருக்கு அபிஷேகம்
ADDED :3255 days ago
ப.வேலூர்: ப.வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சிவன் கோவில்களில், மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோவில் கால பைரவருக்கு, 18 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், நேர்த்திக் கடனாக தேங்காய், நீர் பூசணிக்காய்களில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். ப.வேலூர் காசிவிஸ்வநாதர் கோவில், ஜேடர்பாளையம் அடுத்த வடகரையாத்தூர், பரமத்தி சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.