வத்திராயிருப்பில் ஐயப்ப சுவாமி லட்சார்ச்சனை
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு நடுஅக்ரஹாரம் ராம ஐயப்ப பக்தசபாவின் சார்பில் 42 வது ஆண்டு ஐயப்ப லட்சார்ச்சனை நடந்தது. முதல்நாள் நிகழ்ச்சி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. ஏகாதச ருத்ர பூஜைகள், தாரா ஹோமம், புதிதாக மாலை அணிந்துள்ளவர்களுக்கு சிறப்பு கன்னிபூஜை, இரவு பஜனை நடந்தன. இரண்டாம்நாள் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பஜனை மடத்தில் சுவாமியின் வடிவாக வாழை விளக்குகள் ஏற்றப்பட்டது. அதில் சுவாமியை ஆவாஹணம் செய்வதற்காக வேதவிற்பன்னர்களுடன் பக்தர்களும் சேர்ந்து லட்சார்ச்சனை வழிபாடு செய்தனர். பின் மோட்சதீப வழிபாடு, பஞ்சாட்சர தீபாராதனை வழிபாடு, அன்னதானம் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை, பக்தசபா தலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் சங்கரநாராயணன், துணை செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் துரைசாமி, நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்தனர்.