பொள்ளாச்சி வைகுண்ட ஏகாதசி விழா 7 ஆயிரம் லட்டுகள் தயார்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோவில்களில் ஜன.8 அதிகாலை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.
புனித மாதமான மார்கழியில், வைகுண்ட ஏகாதசி விழா, பிரசித்தி பெற்ற ஆன்மிக நிகழ்வாகும். இவ்விழாவையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நாளை அதிகாலை சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொள்ளாச்சி சுப்பிரமணியர் கோவில் வீதி, கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஜன.7,8 மற்றும் மறுநாள் மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறும். காலை, 10:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை சொர்க்க வாசலில் கட்டத்தேவையான திரவியப்பொருட்கள் பக்தர்களிடம் இருந்து பெறப்படுகின்றன. ஜன.8 அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 5:00 மணிக்குள் பரமபத வாசல் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:00 மணிக்கு விக்னேஷ்வரர் பூஜை, வாசுதேவ புண்யாகவசனம், சங்கல்பம் நடைபெறும். தொடர்ந்து, 5:00 மணி முதல், 5:30 மணிக்குள் பரமபத வாசல் திறக்கப்பட்டு, பெருமாளுக்கு அலங்கார பூஜை, சாற்றுமறை தீர்த்தப்பிரசாதம் வழங்கப்படும். இரவு, 8:00 மணிக்கு நாம சங்கீர்த்தன பஜனை, 8:30 மணிக்கு கண் விழிப்பு சிறப்பு கீர்த்தனை நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசி விழா, பொள்ளாச்சி பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, ஏழு ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.