உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரத்தில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கோவிலில் பெருமாள் அமர்ந்த நிலை, சயன திருக்கோலம், நின்ற நிலை என, மூன்று நிலைகளில் அருள்பாலிக்கிறார். அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும் பரமபத வாசல், காலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் இந்த சன்னிதியில் பெருமாள் சயன திருக்கோலத்தில் அரங்கநாதராக அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து, பெருமாள், காலை, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அஷ்டப்புஜப்பெருமாள் கோவிலில் அதிகாலை, 3:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் முடிந்ததும், காலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்ட போது, கோவிந்தா... கோவிந்தா... என, பக்தர்கள் கோஷமிட்டனர். இந்த இரு கோவில்களிலும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரி காத்த ராமர் என்றழைக்கப்படும், கோதண்ட ராமர் திருக்கோவிலில் ஏகாதசி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஏகாதசியை முன்னிட்டு, காலை, 5:00 மணிக்கு, விசுவரூபமும், 5:30 மணிக்கு, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கூடுவாஞ்சேரி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களிலும், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில், சிறு கோவில்களிலும், விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஊர்வலம் போன்றவை விமரிசையாக நடைபெற்றன. கிளாம்பாக்கத்தில் உள்ள கலைவண்ணப் பெருமாள் கோவில், ஊரப்பாக்கம் சீனிவாசப் பெருமாள் கோவில் போன்ற பல கோவில்களில், சிறப்பு அலங்காரங்களுடன், பக்தர்களுக்கு இறைவன் அருள்பாலித்தார். முக்கிய கோவில்களில், நீண்ட வரிசை, அதிக கூட்டம் போன்றவற்றால், பலர், தங்கள் பகுதிகளிலேயே இருக்கும் கோவில்களில் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !