உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி, மாரம்பாடி, தாண்டிக்குடியில் பொங்கல் விழா

பழநி, மாரம்பாடி, தாண்டிக்குடியில் பொங்கல் விழா

பழநி: மாட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயில் கோசாலை பசு, கன்றுகள் மற்றும் யானை கஸ்துாரிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பழநி ஞானதண்டாயுதபாணிசுவாமி கோயில் மற்றும் உபகோயில்களான பெரியநாயகியம்மன்கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக பசு, காளை மாடுகளை பக்தர்கள் வழங்குகின்றனர். அவை பெரியநாயகியம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயம் கோசாலையில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. நேற்று மாட்டுபொங்கலை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் பசுமாடு, கன்றுகளுக்கு பொங்கல், கரும்பு படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல கோயில் யானை கஸ்துாரிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தி பொங்கல், கரும்பு, ஊட்டச்சத்தை இணை ஆணையர் ராஜமாணிக்கம் வழங்கினார். கள்ளிமந்தயம் கோசாலை மாடுகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பொங்கல் விழா நடந்தது.

வேடசந்துார்: மாரம்பாடி புனித பெரிய அந்தோணியார் கோயிலில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. வேடசந்துார் ஒன்றியம் மாரம்பாடியில் நுாறாண்டு பெருமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பரமசிவம் எம்.எல்.ஏ., விழாவை துவக்கிவைத்தார். உதவி கலெக்டர் வினித், பங்கு பாதிரியார் ஜோசப்ராஜ் முன்னிலை வகித்தனர். இதில் ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளை, பாரம்பரியமான மாட்டு வண்டியில் அமரவைத்து ஊர்மக்கள் அழைத்து வந்தவனர். விழாவில் சாதி மத ஒற்றுமைக்காகவும், நாடு நலம்பெற வேண்டியும், மழை பொழியவும் கிறிஸ்தவர்கள் சமத்துவ பொங்கல் வைத்தனர். விழாவில், டி.எம்.எஸ்.எஸ். இயக்குநர் சாம்சன் ஆரோக்யதாஸ், தாசில்தார் தசாவதாரன், மேலாளர் ரொசாரியோ, சுற்றுலா அலுவலர் உமாதேவி பங்கேற்றனர்.

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப் பகுதியில் விவசாயத்திற்கு உதவும் குதிரைகளுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை பெருமை சேர்க்கும் விதமாக மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல கரடு, முரடான மலை முகடுகளில் ரோடுகளில்லாத தோட்டங்களில் விளையும் விளைப் பொருள்களை எடுத்து வர குதிரைகள் பயன்படுத்தப்படுகிறது. இது தாண்டிக்குடி பகுதியில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதையடுத்து மாட்டுப் பொங்கலன்று குதிரைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மாலை, மரியாதையுடன் பூஜைக்கு அழைத்து வந்தனர். பின் அவற்றுக்கு பொங்கல் வழங்கினர். மேலும் புதுத் துண்டை கழுத்தில் கட்டினர். விவசாயி முருகன் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளாக குதிரை வளர்க்கிறேன். பொதி சுமக்கும் குதிரைகளால் தங்களது குடும்பம் பிழைக்கிறது. எனவே அவற்றிற்கு உரிய மரியாதை அளிக்கிறோம். குதிரைகளுக்கு பொங்கல் படையல் வைத்து வணங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !