உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் பொங்கல் விழா

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் பொங்கல் விழா

குன்றத்துார்: காணும் பொங்கலை முன்னிட்டு, செம்பரம் பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க பலர் குடும்பத்துடன் வந்தனர். ஏரிக்கரையில் உள்ள கன்னியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். செம்பரம்பாக்கம் ஏரி கரையின், 19 கண் மதகு அருகே, ஏரிக்கரையின் நடுவே, 15 அடி ஆழத்திற்குள், கன்னியம்மன் கோவில்உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி அமைக்கும் போதே, ஏரியை காக்கும் தெய்வமாக இந்த கோவில் அமைக்கப்பட்டது. பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் உள்ளே, எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கியதே இல்லை என, கூறப்படுகிறது. காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு, இந்த கோவிலில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் இட்டு, ஏராளமானோர் வழிப்பட்டனர்.

சிற்றுலா தலமான ஏரி: காணும் பொங்கல் என்பதால், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க, ஏராளமான பொதுமக்கள் நேற்று குடும்பத்துடன் வந்தனர். வீட்டிலேயே புளி சாதம், தயிர் சாதம் செய்து எடுத்து வந்து, ஏரிக்கரையில் அமர்ந்து, குடும்பத்துடன் சாப்பிட்டு சென்றனர். பலர் ஏரியில் குளித்து மகிழ்ந்தனர். பொதுமக்கள் வருகையால், செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில், ஐஸ்கிரீம், சிப்ஸ் கடைகள் திடீரென முளைத்தன. ஏரியில் பிடித்த மீன்களை வாங்கி, அங்கேயே சமைத்து சாப்பிட்டு சென்றனர். இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நேற்று சுற்றுலா தளம் போல் காட்சி அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !